குறியாக்க நாணயம்-பகுதி 2

குறியாக்கவியல்(Cryptography)

குறியாக்க நாணயம் என்ற பெயரின் மூலம் இந்த “குறியாக்கவியல்” என்னும் சொல்லில் இருந்து வந்தது .பின் வரும் குறியாக்க நாணயம் பற்றிய கருத்தாக்கம் அனைத்தும் சிறு கதைகள் கொண்டே எளிமையாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் இங்கு தொழிநுட்ப விளக்கமாக எதுவும் இருக்காது.குறியாக்கவியல் பற்றியான கற்பனை கதை இது

இதையும் படியுங்கள்:குறியாக்க நாணயம் பகுதி 1

சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன் மகிழநாடு என்ற ஒரு நாட்டை மகிழன் என்ற அரசன் ஆண்டுவந்தான்.அவனுக்கு வெண்பா என்ற அழகிய மகள் இருந்தால்.மகிழநாட்டிற்கு அருகிலேயே கந்தர்வ நாடு என்ற ஒரு நாட்டை இடியன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.அவனுக்கு சேயோன் என்ற மகன் இருந்தான்.இந்த இரண்டு நாட்டிற்கும் நெடுங்காலமாக பகை நீடித்து வந்தது.ஆனாலும் மக்கள் அனைவரும் பகையை பொருட்படுத்தாமல் இந்த இரண்டு நாட்டிற்கும் நடுவில் உள்ள இனிக்குளம் என்ற பெரும் ஏரிக்கரையில் சித்திரை திருநாளில் கூடுவது வழக்கம்.இது அரசர்களுக்கும் பொருந்தும்.ஒரு குறிப்பிட்ட சித்திரை திருநாளில் அனைவரும் ஏரிக்கரையில் குவிந்து இருந்த பொழுது வெண்பாவும் சேயோனும் முதல் முறையாக ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள நேர்ந்தது.காலம் உருண்டோடியது.எப்படியோ சேயோனுக்கும் வெண்பாவிற்கும் இடையில் காதல் மலர்ந்தது.இருவரும் ஓலைகள் வழியே தங்கள் கருத்துக்களை பரிமாற துவங்கினர்.வெண்பா தாங்கள் பேசுவது யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக ஒரு யோசனை செய்தால்.அந்த யோசனையின் படி இருவரும் குறியாக்க எழுத்துக்களின்(தகவலை மறைத்து பரிமாறி மீட்டெடுப்பது) உதவியால் ஓலைகளில் தகவலை பரிமாறினார்.எடுத்துக்காட்டாக நான் நலம் என்னும் கருத்தை “எகேபிபி கேயஎல்” என்று தங்கள் இருவருக்கும் மட்டும் புரியும் மொழியில் எழுதுவது.இதனால் ஓலையை கொண்டு செல்லும் பட்சி வேறு யார் கையிலாவது அகப்பட்டால் கூட அதில் உள்ள தகவல் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

கதையை இத்தோடு முடித்து கொண்டு குறியாக்கவியல்  கருத்தமைவிற்கு வருவோம்.

குறியாக்கவியல்

படம்: குறியாக்கப்பட்ட தகவல் பரிமாற்றம்

கதையில் சொன்னது போல் ஒரு செய்தியை மறைத்து சங்கேத வார்த்தையாக்கி (Encryption) பரிமாற்றம் நிகழ்ந்த பின் மீண்டும் முன் இருந்தது போல் தகவல் இயல்பு நிலைக்கு(Decryption) மாற்றப்படும். நவீன உலகில் இது    கணிதம்,கணினியியல் மற்றும் பொறியியல் துறைகளை சார்ந்து உள்ளது.மேலும் இங்கு சங்கேத வார்த்தையாக மாற்றப்பட்ட செய்தி Cipher என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது .மேல்  உள்ள படத்தில் “x0Ak3o$2R j”   என்பது Cipher ஆகும்.

ப்ளாக் செயின் தொழிநுட்பம்(Block Chain Technology):

இந்த உலகம் குறியாக்க நாணயத்தை பற்றி அதிக ஆவலோடு பேசியதிற்கு இந்த ப்ளாக் செயின் தொழிநுட்பம் மிக முக்கிய பங்கை கொண்டுள்ளது.ப்ளாக் செயின் தொழிநுட்பத்தை ஒரு சிறு கதை கொண்டு எளிய முறையில் புரிந்து கொள்வோம்.

 

ஒரு பள்ளியில் செழியன் மற்றும் ஆதித்தன் என்னும்  இரு சிறுவர்கள் நண்பர்களாக உள்ளனர் .ஒரு நாள் ஆசிரியை ஒருவர் இனி இந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளும் மாணவர்களும் பழங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அதை தினம் ஒரு மாணவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் .ஒரு நாள் பகல் நேரத்தில் செழியன் தான் கொண்டு வந்த மாம்பழத்தை தன் அருகில் இருந்த நம்பியாரிடம் தந்து அவனிடம் இருந்த வாழைப்பழங்களை வாங்கி கொள்கிறான்.இதை ஆதித்தனுக்கு காண்கிறான்.ஆசிரியை மாலை வந்த பொழுது நம்பியார் ஆசிரியையிடம் சென்று இன்று செழியன் தன்னிடம் பழத்தை தரவில்லை என்றும் தன்னிடம் வாழைப்பழங்களை மட்டும் பெற்று கொண்டான் என்று கூறினான்.இதை கேட்ட செழியன் தான் பழங்களை தந்து விட்டதாகவும் அதற்கு சான்று ஆதித்தன் உள்ளான் என்றும் கூறினான்.இதை கேட்ட ஆசிரியை அடுத்த நாளில் இருந்து அனைவரும் பறிமாறி கொள்வதை தான் ஒரு பேரேட்டில்(Ledger) எழுதி வைப்பதாகவும் அந்த பேரிட்டில் உள்ள அனைத்தும் வகுப்பிற்கு என்று உள்ள செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் கூறினார்.இதனால் யாரும் பேரேட்டில் உள்ளதை அழிக்கவோ மாற்றம் செய்யவோ முடியாது என்று கூறினார்.ஆசிரியை தினமும் பதிவிடும் அனைத்தும் வகுப்பில் உள்ள 40 பேரின் கைபேசியில் உள்ள செயலியில் இருக்கும் என்றும் இதனால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

ப்ளாக் செயின் தொழிநுட்பம்

  வங்கிகள்:

கதையில் நாம் அறிந்து கொண்டதை உண்மை வாழ்வில் புகுத்தி பார்ப்போம்.நீங்கள் ஒரு வங்கியில் கணக்கு வைத்து உள்ளீர்கள்.உங்கள் கணக்கு விபரங்கள் வங்கிக்கு மட்டுமே தெரியும் மேலும்  தான் வைத்துள்ள கணினியில் உங்களது விபரங்களை சேமித்து வைத்து கொள்ளும்.திடிரென்று ஒரு நாள் குறும்பர்(Hacker) வங்கி கணினியில் நுழைந்து அனைத்து தகவலையும் திருடி விடுகிறார் என்ற நிலை வரும்பொழுது உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் நிலை வரும்.

இந்த சூழ்நிலையில் ப்ளாக் செயின் தொழிநுட்பம் கொண்டு உருவாக்கப்படும் வணிக அல்லது வங்கி அமைப்பு  உங்கள் வங்கி கணக்கின் தகவல்,அந்த வங்கியின் உலகம் முழுதும் இருக்கும் பயனாளர்களிடம்  குறியாக்க வடிவத்தில் இருக்கும் .எடுத்துக்காட்டாக நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரு குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்கள்.அனைவரின் கணக்குகளும் அவர் அவர்களின் கைபேசியோ அல்லது கணினிகளில் இருந்து செயலிகள் மூலம்  கட்டுப்படுத்தும் வசதி கொண்டது எனில் உங்கள் கைபேசியில் உங்கள் நண்பர்களின் கணக்கு விபரங்கள் அனைத்தும் குறியாக்க வடிவில் இருக்கும்.அது போல் அந்த வங்கி பயனாளர்களின் அனைவரின் கைபேசி செயலிகளிலும் அனைவரின் கணக்கு பற்றிய தரவுகள் குறியாக்க வடிவில் இருக்கும்.    இதனால் உங்கள் வங்கி தகவல் மிக பாதுகாப்பாக இருப்பதோடு தகவல் அழிந்து போகும் நிலை என்றும் வராது.மேலும் முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் மிக குறைவே.

ப்ளாக் செயின் தொழிநுட்பம் இந்த நூற்றாண்டின் இணையம் என்று பலரும் கூறுவதில் இருந்து இதன் பலன் எத்தகையது என்று அறிய இயலும்.உலகின் பல  முன்னணி வங்கிகள்,நிறுவனங்கள் இதை ஆய்வு முதலீடு செய்ததோடு மட்டும் அல்லாமல் பயன்படுத்தவும் துவங்கி உள்ளனர்.

குறியாக்க நாணயம் மற்றும்  ப்ளாக் செயின் தொழிநுட்பம்

குறியாக்க நாணயமும் இதே தொழிநுட்பத்தை கொண்டு செயல்படுவதால் உலகம் முழுதும் இருக்கும் குறியாக்க நாணயத்தை பயன்படுபவரிடம் உங்கள் கணக்கின் தகவல் குறியாக்க வடிவில் இருக்கும்.இதனால் தகவல் தொலைந்து போக வாய்ப்புகளோ ஏமாற்ற வாய்ப்புகளோ இருக்காது .குறியாக்க நாணயம் ஒரு நபரிடம் இருந்து இன்னோரு நபருக்கு நடுவில் நடக்கும் செயல் என்பதால் இதில் வங்கிகளின் தலையீடு இருக்காது.இதனால் வங்கிகள் வசூல் செய்யும் கட்டணங்கள் மற்றும் இல்லாமல் அனைத்தகு பரிவர்த்தனைகளும் மெய்நிகரிலே நடக்கும்.

மேலும்  குறியாக்க நாணயத்தை பற்றியான  விளக்கம்  பகுதி-3ல்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தது எனில் பின்னூட்டம்(Comment) இட மறவாதீர்.

 

 

 

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *