மேகக் கணிமை  ( Cloud computing )
மேகக் கணிமை

மேகக் கணிமை ( Cloud computing )

Spread the love

            மேகக் கணிமை தெரியுமா ? என்ன மேகமா ? இந்த மேகம் மழை தருமா ? அல்லது பார்க்க எப்படி தான் இருக்கும் ? சரி, சரி உங்களில் சிலருக்கு இந்த குழப்பம் இருக்கலாம். மேகக் கணிமை என்னவென்று புரியும்படி எளிய வார்த்தைகளில் கூற முனைந்தால் , நாம் பொதுவாக இணையத்தில்   பயன்படுத்தும் அல்லது பயன்படுத்திய தரவுகள்  (Data) மற்றும் பயன்பாட்டு  நிரல்  (Program ) என அனைத்துமே நம் கணினியின் வன்தட்டில் ( Hard Disk ) சேமிக்கப்படும் அல்லவா. ஆனால், மேகக் கணிமையில் ( Cloud Computing ) நீங்கள் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்திய தரவுகள் ( Data ) அனைத்தும் வன்தட்டில் அல்லாமல் இணையத்தில் சேமிக்கப்படும்.

மேகக் கணிமை ( Cloud Computing )

            மேகக் கணிமை என்னும் வார்த்தையில் உள்ள மேகம் என்னும் சொல் வெறும் உருவகம் ( Metaphor ) தான், உண்மையில் மழை தரும் மேகத்திற்கும் இந்த மேகக் கணிமைக்கு பெரிதாக ஒன்றும் தொடர்பில்லை. மேலும், ஏற்கனவே கூறியது போல சில ஆண்டுகள் முன் வரை, நமது தரவுகள் அனைத்தும் நமது கணினி  வன்தட்டில்  (நமது கைபேசிக் கூட ஒரு வகை கணினி தான்) சேமிக்கப்படும்.  அதாவது  நமது தரவுகள் அனைத்தும் நம் அருகிலேயே இருக்கும்.

மேகக் கணிமை
மேகக் கணிமை 

ஒரு கதை 

               நாம் இதை ஒரு கதையோடு தொடர்புபடுத்தி புரிந்துகொள்வோம். ஒரு ஊரில் சேயோன் மற்றும் செழியன் என்னும் இரு நண்பர்கள் இருந்தார்கள்.  அவர்கள் இருவரும் தனித்தனியாக மழைக்காலம் வருவதை ஒட்டி தானியங்களை சேகரிக்க திட்டமிட்டனர்.

                சேயோன் தன் சிறிய  வீட்டிலேயே தானியங்களை சேகரிக்க திட்டமிட்டான். வீட்டில் தானியங்களை பாதுகாக்க அதிக பணம் செலவு ஆகும் என்று தெரிந்தும் தானியங்கள் தன் அருகிலேயே இருக்கட்டும் என்று நினைத்து அவ்வாறு செய்தான்.

                ஒரு கட்டத்திற்கு பின் தானியங்களை சேமிக்க அவன் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட துவங்கியது. மேலும் பூச்சிகள், எலிகள் போன்றவற்றிடம் இருந்து தானியங்களை பாதுகாக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளானான்.

பாதுகாப்பு 

                சேயோனுக்கு நேர் மாறாக செழியன் வேறுவழியில் தானியங்களை சேமிக்க துவங்கினான். அவன் ஊரில் இருந்த தானிய சேமிப்பு கிடங்கில் சேமிக்க முடிவு செய்தான். அந்த தானிய சேமிப்பு நிறுவனமும் தானியங்களை பாதுகாப்பதாகவும் உறுதி அளித்து  அதிக தானியங்களை சேமிக்கவும் அனுமதி அளித்தது.

தரவுகள் 

               அவ்வளவு தான் கதை முடிந்தது. இப்பொழுது மேலுள்ள கதையுடன் மேகக்கணிமையை தொடர்பு படுத்துவோம். நம் கணினி தான் சேயோனின் வீடாக இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் தானியங்கள் தான் நமது  தரவுகள் ( Data ) .

             ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் தானியங்களை சேமிக்க இடம் இல்லாமல் உருவாகுவதை போல் கணினியிலும் தரவுகளை சேமிக்க இடம் இல்லாமல்  உருவாகும் அல்லது நம் கணினியில் இருக்கும் தரவுகள் எப்பொழுதுவேண்டுமானாலும் அழிந்துபோக வாய்ப்புண்டு . மேலும், கணினியில் உள்ள தரவுகளை பாதுகாக்கவும் அதிக செயல்  பிடிக்கும்.

சேவையகம் 

            மேலே உள்ள தானிய கிடங்கு நிறுவனம்  தான் மேகக் கணிமை அளிக்கும் நிறுவனம். எடுத்துக்காட்டு : கூகுள் மேகக் கணிமை நிறுவனம் ( Google Cloud ).  இந்த நிறுவனமானது நம் தரவுகளை  அதன் சேவையகத்தில் ( Server ) சேமிக்கவும் நமக்கு வேண்டும் நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்ளவும் முழு சுதந்திரம் அளிக்கிறது. மேலும் நம் தரவுகளை பாதுகாக்கவும் உறுதி அளிக்கிறது.

மின்னஞ்சல் 

          இப்பொழுது இணையம் கிட்ட தட்ட மேகக்கணிமை நோக்கி நகர்ந்து விட்டது. நாம் பயன்படுத்தும் கூகுளின் மின்னஞ்சல் ( Gmail ) முதல் நீங்கள் பாடல் கேட்க்கும் ஸ்பாட்டிஃபை ( Spotify ) வரை  பல சேவைகள் மேகக்கணிமையின் உதவியுடன் நடைபெறுகிறது.

         மேகக் கணிமையின் மிக முக்கியமான சிறப்பு இதன் சேவையை உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்னும் சேவையே.

             

Close Menu
%d bloggers like this: